எழுந்து போனபின்
என்னை இழுத்து
மடியில் அமர்த்திக் கொள்கிறது
அவள் வாசனை படிந்த
பேருந்து இருக்கை
00
நள்ளிரவில்
உறங்கிக் கொண்டிருந்த
அவள் நினைவுகள் மீது
புரண்டு படுத்தேன்...
விழித்துக் கொண்ட அவைகள்
அவள் வீட்டுக்கு
கூட்டிபோகச் சொல்லி
அடம்பிடிக்கின்றன!
00
அவள் வீதியைக்
கடக்கிறேன்
அவள் நினைவுகளை
இறுகப் பற்றிக்கொண்டு
00
ஒவ்வொரு சமயமும்
ஒரு பெயர் சொல்வாள்...
பிசாசு
எருமை
லூசு
செல்லம்
பட்டுக்குட்டி
குட்டிமா
இவை எல்லாம் விட
'முர..டா...' என முனகும்போதுதான்
மொத்தமும்
காதலாய் இருக்கும்!
00
'வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்
உங்களை எனக்கு
மிகப் பிடித்திருக்கிறது'
என்றாள்
'எனக்கும்தான்' என்று
நான் சொன்னபோது
விட்டுவிட்டதாகச் சொன்ன வெட்கம்
அவள் மீது
மீண்டும் படர்ந்தது
அவ்வளவு அழகாக இருந்தது!
--நாவிஷ் செந்தில்குமார்
Tuesday, September 21, 2010
இப்படிக்கு முரடன்
Labels:
கவிதை,
கவிதைகள்,
காதல் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
காதலின் ரிதம் இதமாய் ஒளிகிறது.........வரிகளின் ஊடே ........அருமை
Post a Comment