Monday, April 20, 2009

என்னவளே!

பேருந்து நடத்துனர் கேட்ட
ஐம்பது பைசா சில்லறை
“இல்லை” என்று சொல்கையில்
உன் உதடுகள் சுழித்து
உதிர்க்கிறாய்
கோடானு கோடி கொடுத்தாலும்
கிடைக்காத அழகை...

நீ பேசிய
வார்த்தைகளைக் காட்டிலும்
பேசாத வார்த்தைகள்தான்
மிகப்பெரிய பாக்கியசாலிகள்!
உனக்குள்ளேயே இன்னும்
புதைந்து கிடக்கின்றனவே!

என்னதான்
எனக்காகவும் நீயே
சாப்பிடுவதாகச் சொன்னாலும்
உனக்காகக் கொஞ்சம்
சாப்பிடச் சொல்லி
ஒவ்வொரு வேளையும்
பசிக்கிறது எனக்கு!

கொடுத்ததைக் கேட்கும்
குறுகிய புத்தி
உனக்கும் எனக்கும்
முத்த விசயத்தில்...
வாரிவாரிக் கொடுத்தாலும்
தீர்ந்தபாடில்லை
நம் இதழ்கள் வழங்கிய
முத்தக்கடன்!
--நாவிஷ் செந்தில்குமார்

Monday, April 6, 2009

இது ஒரு கவிதைக்கான கவிதை!

படங்கள் இல்லாத
பாடப்புத்தகத்தில்
நீ வந்து அமர்ந்து
கொள்வதால்
புரட்டப் புரட்ட
படப்புத்தகமாகவே
காட்சியளிக்கிறது!

வரியே இன்றி
தலைப்பே கவிதையாய்
எழுதச் சொன்னார்கள்
உன் பெயரை
எழுதிவிட்டேன்!
(முக)வரிகளே இல்லாத
கவிதைதானே நீ...

எனது கவிதையின்
உயிரோட்டம்
பல பக்க வரிகளில் இல்லை
உனது ஒற்றைவரிப்
பின்னூட்டத்தில்தான்
உள்ளது!

"என் உடையில்
எந்த வண்ணம் பிடிக்கும்?"
என்று கேட்கிறாய்
என்ன உடையானாலும்
உன் எண்ண உடை
வண்ணமாம் வெண்மைதான்
எனக்குப் பிடிக்கும்!

உனக்குப் பிடிக்காது
என்பதை
எனக்குப் பிடிக்கும்படி
சொல்வதால்தான்
நமக்குள் பிடித்துப்போனது!
--நாவிஷ் செந்தில்குமார்