Saturday, June 26, 2010

விளையாட்டுப் பொம்மை

வெயில் நாளில்
குடை எடுத்துவர
மறந்துபோனாய்...
ஒரு மழை நாளை
ஊருக்கே பரிசாகத் தந்தது
இயற்கை.
00
கடற்கரையில் அலைபிடித்து
நீ விளையாட
என் மனம் நுரைதள்ளுகிறது...
நீ நுரையள்ளி விளையாடத்
தொடங்க
என் மனதில் காதல்
அலையடிக்கத் தொடங்குகிறது!
00
உன் வெட்கம் உறங்கும்
தருணம் பார்த்து
இரவெல்லாம்
விழித்துக்கொண்டிருக்கிறது
உனக்கான
ஒரு முத்தம்.
00
நான் வெறும் அம்பு
என்னை எய்தது
காதலே...
ஆனாலும் பரவாயில்லை
என்ன செய்வதானாலும்
என்னையே செய்.
00
நீ விளையாடி விளையாடியே
உடைந்து போன
விளையாட்டுப் பொம்மை
என்னை ஒருநாள்
வீசியெறிந்து விடுகிறாய்...
உண்மையில் நான்
உடைந்து போனது
தூக்கியெறியப்பட்ட
நாளில்தான் தெரியுமா?

Wednesday, June 23, 2010

காதல் கவிதைகள்

வழக்கமான
இசையைப் போலில்லை
இன்றவளின்
கொலுசோசை
உதிர்ந்து போயிருக்கலாம்
சில மணிகள்…

நானும் அவளும்
பிரிவதற்கான காரணங்களை
அடுக்கிவிட்டு
பிரிந்துவிட்டோம்…
சேர்வதற்கான காரணத்தை
வைத்திருக்கிறோம்
அது காதல்

இனாமாகக் கொடுத்ததாகச்
சொல்வாள்…
இரவல் பொருளாக
நினைத்துதான்
வாங்கினேன் என
திரும்பக் கொடுத்துவிடுவேன்
முத்தத்தை

தேநீர்க் கோப்பையில்
நிரம்பிக்கிடக்கிறது
காதல்
சுவைத்துத் தீர்க்கிறோம்
நீயும் நானும்…
நிரப்பிக் கொண்டேயிருக்கிறது
காலம்

உலகமொத்தத் திமிர்
உனக்கு - அது
உண்டாக்கிச் சென்றது
காதல்
எனக்குள்

தொட்டுப் பேசாதது
காதலுக்குக் கெட்டப் பழக்கம்
அதை நீ விட்டொழிப்பது
எப்போது?