Saturday, August 28, 2010

ஒரு விரல் ஒரு லட்சம்

காய்ந்த உதடுகளை
நீ ஈரப் படுத்திக்கொள்வது
அழகு!
காய்ந்த என் உதடுகளை
உன் உதடுகளால்
ஈரப்படுத்துவது
இன்னும் அழகு!
00
நீயொரு
மழைக்கவிதை கேட்டாய்...
நீயொருநாள்
மழையில்
நனைந்த கதையைச்
சொன்னேன்.
00
சாரல் துளிகள் படிந்த
சாளரக் கண்ணாடியில்
உன் பெயரை
எழுதினேன்...
அழிக்க மனமில்லாத
மழை
நின்று போனது!
00
கை விரல்களால் காட்டு
எத்தனை முத்தங்கள் தருவாய்?
எனக் கேட்டாய்
ஒரு லட்சம்…
இரண்டு லட்சம் என
விரல்களை விரிக்கத் தொடங்கியதும்
வெட்கத்தில்
நச்சென்று என் மார்பில்
தலை சாய்த்தாய்...
இச்சென்று உன் நெற்றியில்
விழுந்தது
முதல் முத்தம்!
--நாவிஷ் செந்தில்குமார்

Friday, August 13, 2010

மனவெட்டி

ஊருக்குப் போகும்போது
உனது நகவெட்டியை
மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டாய்
பார்க்கும்போதெல்லாம்
என் மனதை வெட்டிக்கொண்டிருக்கிறது
அது
00
ஏனோதானோவென
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கவிதைகளை…
எப்படியும் நீ வாசிக்கையில்
அழகாகிவிடும் என்ற
நம்பிக்கையில்
00
எல்லோரும் அணிகலன்களை
சேகரித்து வைப்பது போல
உனக்காக
கவிதைகளை எழுதி வைத்திருக்கிறேன்
வா வந்து
அணிந்துகொள்!
00
நீ சேலையில் இருக்கிற
புகைப்படம் அனுப்பிய
மின்னஞ்சலில்தான்
தேவதையில் இருக்கிற
புகைப்படத்தையும்
சேலை எனக்கு அனுப்பியது!
00
நண்பர்களிடம்
உன்னை மறந்துவிட்டதாகச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவு
வரும்போதெல்லாம்...
00
மற்றவர்களுக்கு எப்படியோ...
என் திருமணம்
நீ என்ற
சொர்க்கத்தால்தான்
நிச்சயிக்கப்படும்!
--நாவிஷ் செந்தில்குமார்