Wednesday, March 4, 2009

பிரிதலுக்கு முன்…

உன் கண்கள் நடத்தும்
நூலகத்தில்
எனக்களிக்கப்பட்ட
"முதன்மை வாசகன்"
முத்திரையை அழி!

என் தேகத்தின்
பாகங்கள் அனைத்திலும்
உன் தீண்டாமை என்னும்
பாவச்செயல் போக்கு!

ஒவ்வொரு செல்லிலும்
உறைந்து கிடக்கும்
உன் நினைவுகளை
உதடுகளால்
உரசி உரசியே எடு!

காலையில் தினமும்
தலைவாரும் போதெல்லாம்
உன் கூந்தல்வரை நீளும்
என் விரல்கள்
நாளையும் தேடுமே
அவைகளை இப்போதே
வெட்டியெறி!

இனி நான் வீசியெறியும்
விரக்திப் பெருமூச்சில்
உலகமே உருகுமே
அதற்கு ஒரு
மாற்று வழி அறி!

மொத்தத்தில்
உனது பிரிதலும்
எனது மறைதலும்
ஒன்றே எனக் கொள்.

– நாவிஷ் செந்தில்குமார்

Monday, March 2, 2009

நீ

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு சேலை
கட்டிவருகையில்
எனக்காக
ஒரு கவிதையையும்
கூட்டி வருபவள்
நீ

நீண்ட வரிசையில்
மிகப்பின்னால் நிற்கையில்
காத்திருப்பின் வலியை
நீடிக்கச் சொல்கிறது
மனசு...
எனக்கு முன்னால்
நீ

வெந்துதணியும்
வெப்பக்காட்டில்
முக்கி முணகித்திரிந்த
காதல்பறவை நான்
வாரிக்கொண்ட
வேடந்தாங்கல்
நீ

இருண்ட தேசத்தில்
எரியும்
ஒற்றை மெழுகுவர்த்தியாய்
எனக்கென எப்போதும்
நீ

--நாவிஷ் செந்தில்குமார்

Sunday, March 1, 2009

காதலி கட்டிய சேலை

உன்னை முழுதும்
மறைத்த சேலை
என் காதலை
வெளிச்சம் போட்டுக்காட்டியது

ரசித்துக்கொண்டிருக்கையிலேயே
நீ செல்லும்
வாகனம் வந்தது...
காரோட்டி வந்தவன்
தேரோட்டியாய்ப் போனான்

உன் வருகை மழை
இல்லாத நாட்களிலும்
வாசனைத் தூரலால்
செழித்துக் கிடக்கின்றது
என் வீதி.

முலாம் பூசிக்கொள்வதற்கு
முன்பாக உன்னைப்
பூசிக்கொண்டது போல
எப்போதும்
உன்னையே காட்டும்
என் வீட்டுக்கண்ணாடி

நீ ஊருக்குச் செல்வதெல்லாம்
வெறும் பேருக்குத்தான் போல
உன் நினைவுகள்
என்னையே சுற்றிக்கொண்டிருக்கின்றன

--நாவிஷ் செந்தில்குமார்