Thursday, February 17, 2011

இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்

மூன்றாவது வார்த்தையை
சொல்லத் தொடங்கினாய்...
இரண்டாவது வார்த்தையில்
இறந்துபோனவனிடம்
00
யாரோபோல வந்தாய்
எத்தனையோ நிகழ்த்திவிட்டு
யாரோபோலவே சென்றாய்
00
கடல்மண்
அள்ளிப்போனாய்
உன் காலணியில்
00
நாம் நடந்துபோனோம்
காலத்தின் மீது
காதலோடு...
00
இவையாவும் காதலில்லை
காதலே இல்லாமலும்
இல்லை.
--நாவிஷ் செந்தில்குமார்

Tuesday, September 21, 2010

இப்படிக்கு முரடன்

எழுந்து போனபின்
என்னை இழுத்து
மடியில் அமர்த்திக் கொள்கிறது
அவள் வாசனை படிந்த
பேருந்து இருக்கை
00
நள்ளிரவில்
உறங்கிக் கொண்டிருந்த
அவள் நினைவுகள் மீது
புரண்டு படுத்தேன்...
விழித்துக் கொண்ட அவைகள்
அவள் வீட்டுக்கு
கூட்டிபோகச் சொல்லி
அடம்பிடிக்கின்றன!
00
அவள் வீதியைக்
கடக்கிறேன்
அவள் நினைவுகளை
இறுகப் பற்றிக்கொண்டு
00
ஒவ்வொரு சமயமும்
ஒரு பெயர் சொல்வாள்...
பிசாசு
எருமை
லூசு
செல்லம்
பட்டுக்குட்டி
குட்டிமா
இவை எல்லாம் விட
'முர..டா...' என முனகும்போதுதான்
மொத்தமும்
காதலாய் இருக்கும்!
00
'வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்
உங்களை எனக்கு
மிகப் பிடித்திருக்கிறது'
என்றாள்
'எனக்கும்தான்' என்று
நான் சொன்னபோது
விட்டுவிட்டதாகச் சொன்ன வெட்கம்
அவள் மீது
மீண்டும் படர்ந்தது
அவ்வளவு அழகாக இருந்தது!
--நாவிஷ் செந்தில்குமார்

Friday, September 3, 2010

நீயொரு குழந்தை

என் வலைப்பூவெங்கும்
தேவதை வாசம்.

வேறொரு பெயரில்
வந்து போகிறாயாடி?
00
கொண்டுவந்த
விளையாட்டுப் பொருட்களையெல்லாம்
குழந்தையிடம் கொடுத்துவிட்டு
நீ விளையாட
என்னை மட்டும்
எடுத்துக்கொள்வாய்!
00
நம்மிடையேயான பிரியத்தை
முத்தங்களைக் கொண்டு
அளவிடத்
தொடங்கிய நாளிலிருந்து
மொத்தவீடும்
முத்தவீடாகக் காட்சியளிக்கிறது!
00
நீ ரொம்ப அடக்கமானவள்
எனச் சொன்னதும்
விழுந்து விழுந்து
சிரிக்கிறாய்!
கவனி…
உன்னை
என்னிரு கரங்களுக்கிடையேயல்லவா
வைத்துக்கொண்டு சொல்கிறேன்!
00
பெயரென்னவென்று கேட்டால்
சொல்லவேமாட்டாய்…
இன்னும்
பெயர் வைக்கப்படாத
குழந்தையா? எனக் கேட்டவாறே
உன்னை
அள்ளிக் கொஞ்சுவேன்...
என் பெயரை
திரும்பத் திரும்ப
சொல்லத் தொடங்குவாய்!
00
வெறுங்கையோடு
வீடு வருவேன்...
உனக்குக் கொடுக்க
என்னிடம்
முத்தங்களைத் தவிர
வேறெதுவும் இல்லையெனத் தெரிந்து
வெட்கப்பட்டு கதவருகே
ஒளிந்துகொள்வாய்...
--நாவிஷ் செந்தில்குமார்.

Saturday, August 28, 2010

ஒரு விரல் ஒரு லட்சம்

காய்ந்த உதடுகளை
நீ ஈரப் படுத்திக்கொள்வது
அழகு!
காய்ந்த என் உதடுகளை
உன் உதடுகளால்
ஈரப்படுத்துவது
இன்னும் அழகு!
00
நீயொரு
மழைக்கவிதை கேட்டாய்...
நீயொருநாள்
மழையில்
நனைந்த கதையைச்
சொன்னேன்.
00
சாரல் துளிகள் படிந்த
சாளரக் கண்ணாடியில்
உன் பெயரை
எழுதினேன்...
அழிக்க மனமில்லாத
மழை
நின்று போனது!
00
கை விரல்களால் காட்டு
எத்தனை முத்தங்கள் தருவாய்?
எனக் கேட்டாய்
ஒரு லட்சம்…
இரண்டு லட்சம் என
விரல்களை விரிக்கத் தொடங்கியதும்
வெட்கத்தில்
நச்சென்று என் மார்பில்
தலை சாய்த்தாய்...
இச்சென்று உன் நெற்றியில்
விழுந்தது
முதல் முத்தம்!
--நாவிஷ் செந்தில்குமார்

Friday, August 13, 2010

மனவெட்டி

ஊருக்குப் போகும்போது
உனது நகவெட்டியை
மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டாய்
பார்க்கும்போதெல்லாம்
என் மனதை வெட்டிக்கொண்டிருக்கிறது
அது
00
ஏனோதானோவென
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கவிதைகளை…
எப்படியும் நீ வாசிக்கையில்
அழகாகிவிடும் என்ற
நம்பிக்கையில்
00
எல்லோரும் அணிகலன்களை
சேகரித்து வைப்பது போல
உனக்காக
கவிதைகளை எழுதி வைத்திருக்கிறேன்
வா வந்து
அணிந்துகொள்!
00
நீ சேலையில் இருக்கிற
புகைப்படம் அனுப்பிய
மின்னஞ்சலில்தான்
தேவதையில் இருக்கிற
புகைப்படத்தையும்
சேலை எனக்கு அனுப்பியது!
00
நண்பர்களிடம்
உன்னை மறந்துவிட்டதாகச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவு
வரும்போதெல்லாம்...
00
மற்றவர்களுக்கு எப்படியோ...
என் திருமணம்
நீ என்ற
சொர்க்கத்தால்தான்
நிச்சயிக்கப்படும்!
--நாவிஷ் செந்தில்குமார்

Friday, July 30, 2010

ஒரு காதலி...ஓராயிரம் காதல்!

போனால் போகட்டுமென
ஒரு பார்வை பார்ப்பாய்
வீணாகப்
போய்விடக்கூடாதென
அதைக் கவிதையில்
அடைத்துவைப்பேன்!
00
கவிதையைப் புரிந்துகொள்ள
முடியவில்லையென
கவலைப்படாதே...
இங்கே பலருக்கும்
தன்னைப் புரிந்துகொள்கிற
தன்மை இருப்பதில்லை.
00
சிற்பங்களோடெல்லாம் நின்று
புகைப்படம் எடுக்காதே...
உன்னோடு பார்க்கையில்
அவையெல்லாம்
அற்பமாகத் தெரிகின்றன பார்!
00
ஒருநாள்
உன் முத்தங்கள் அனைத்தையும்
கொடுத்துவிடு…
எத்தனைதான் வைத்திருக்கிறாய்
என கணக்குப் பார்த்துவிட
துடிக்கிறது மனசு.
00
எனக்கு
ஒரு காதலி
அவள்மீது
ஓராயிரம் காதல்!