போனால் போகட்டுமென
ஒரு பார்வை பார்ப்பாய்
வீணாகப்
போய்விடக்கூடாதென
அதைக் கவிதையில்
அடைத்துவைப்பேன்!
00
கவிதையைப் புரிந்துகொள்ள
முடியவில்லையென
கவலைப்படாதே...
இங்கே பலருக்கும்
தன்னைப் புரிந்துகொள்கிற
தன்மை இருப்பதில்லை.
00
சிற்பங்களோடெல்லாம் நின்று
புகைப்படம் எடுக்காதே...
உன்னோடு பார்க்கையில்
அவையெல்லாம்
அற்பமாகத் தெரிகின்றன பார்!
00
ஒருநாள்
உன் முத்தங்கள் அனைத்தையும்
கொடுத்துவிடு…
எத்தனைதான் வைத்திருக்கிறாய்
என கணக்குப் பார்த்துவிட
துடிக்கிறது மனசு.
00
எனக்கு
ஒரு காதலி
அவள்மீது
ஓராயிரம் காதல்!
Friday, July 30, 2010
ஒரு காதலி...ஓராயிரம் காதல்!
Friday, July 2, 2010
பத்துக்கண்கள்
விரல்களைத் தாண்டி
வளர்ந்துவிட்ட நகம்
உன் நினைவுகள்
வெட்டமுடிகிறதே தவிர
வேரோடு களைய நினைத்தால்
உயிர் போகிறது
வலி!
00
மின்காந்த அலைகளுமிழும்
அவளினிரு கண்களைத்
தவிர்க்க வேண்டி
தலை கவிழ்த்தேன்...
பாதங்களில்
பத்துக்கண்கள் கொண்டு
வெறிக்கிறாள்.
00
நீ நடந்து செல்லும்
பாதையெங்கும்
ரங்கோலியொன்றை
வாங்கிக்கொள்கிறது
இந்தப் பூமி
00
உன்னிடம் மட்டுமே சொல்ல
என்னிடம்
ஒரு வார்த்தையுண்டு
உன்னோடு வாழ மட்டுமே
என்னிடம்
ஒரு வாழ்க்கையுண்டு
00
எனக்கு இனி நான்
வேண்டாம்…
நீ மட்டுமே போதும்.
00
நீ
நான்
நம்மிடையே காதல்.
பரிமாறிக்கொண்ட
பரிசுப்பொருட்களைத்
திரும்பக்கொடுத்துவிட்டுப்
பிரிந்தோம்...
அந்த முத்தங்களை
என்ன செய்யலாம்?
-நாவிஷ் செந்தில்குமார்.
Saturday, June 26, 2010
விளையாட்டுப் பொம்மை
வெயில் நாளில்
குடை எடுத்துவர
மறந்துபோனாய்...
ஒரு மழை நாளை
ஊருக்கே பரிசாகத் தந்தது
இயற்கை.
00
கடற்கரையில் அலைபிடித்து
நீ விளையாட
என் மனம் நுரைதள்ளுகிறது...
நீ நுரையள்ளி விளையாடத்
தொடங்க
என் மனதில் காதல்
அலையடிக்கத் தொடங்குகிறது!
00
உன் வெட்கம் உறங்கும்
தருணம் பார்த்து
இரவெல்லாம்
விழித்துக்கொண்டிருக்கிறது
உனக்கான
ஒரு முத்தம்.
00
நான் வெறும் அம்பு
என்னை எய்தது
காதலே...
ஆனாலும் பரவாயில்லை
என்ன செய்வதானாலும்
என்னையே செய்.
00
நீ விளையாடி விளையாடியே
உடைந்து போன
விளையாட்டுப் பொம்மை
என்னை ஒருநாள்
வீசியெறிந்து விடுகிறாய்...
உண்மையில் நான்
உடைந்து போனது
தூக்கியெறியப்பட்ட
நாளில்தான் தெரியுமா?
Wednesday, June 23, 2010
காதல் கவிதைகள்
வழக்கமான
இசையைப் போலில்லை
இன்றவளின்
கொலுசோசை
உதிர்ந்து போயிருக்கலாம்
சில மணிகள்…
நானும் அவளும்
பிரிவதற்கான காரணங்களை
அடுக்கிவிட்டு
பிரிந்துவிட்டோம்…
சேர்வதற்கான காரணத்தை
வைத்திருக்கிறோம்
அது காதல்
இனாமாகக் கொடுத்ததாகச்
சொல்வாள்…
இரவல் பொருளாக
நினைத்துதான்
வாங்கினேன் என
திரும்பக் கொடுத்துவிடுவேன்
முத்தத்தை
தேநீர்க் கோப்பையில்
நிரம்பிக்கிடக்கிறது
காதல்
சுவைத்துத் தீர்க்கிறோம்
நீயும் நானும்…
நிரப்பிக் கொண்டேயிருக்கிறது
காலம்
உலகமொத்தத் திமிர்
உனக்கு - அது
உண்டாக்கிச் சென்றது
காதல்
எனக்குள்
தொட்டுப் பேசாதது
காதலுக்குக் கெட்டப் பழக்கம்
அதை நீ விட்டொழிப்பது
எப்போது?
Monday, April 20, 2009
என்னவளே!
பேருந்து நடத்துனர் கேட்ட
ஐம்பது பைசா சில்லறை
“இல்லை” என்று சொல்கையில்
உன் உதடுகள் சுழித்து
உதிர்க்கிறாய்
கோடானு கோடி கொடுத்தாலும்
கிடைக்காத அழகை...
நீ பேசிய
வார்த்தைகளைக் காட்டிலும்
பேசாத வார்த்தைகள்தான்
மிகப்பெரிய பாக்கியசாலிகள்!
உனக்குள்ளேயே இன்னும்
புதைந்து கிடக்கின்றனவே!
என்னதான்
எனக்காகவும் நீயே
சாப்பிடுவதாகச் சொன்னாலும்
உனக்காகக் கொஞ்சம்
சாப்பிடச் சொல்லி
ஒவ்வொரு வேளையும்
பசிக்கிறது எனக்கு!
கொடுத்ததைக் கேட்கும்
குறுகிய புத்தி
உனக்கும் எனக்கும்
முத்த விசயத்தில்...
வாரிவாரிக் கொடுத்தாலும்
தீர்ந்தபாடில்லை
நம் இதழ்கள் வழங்கிய
முத்தக்கடன்!
--நாவிஷ் செந்தில்குமார்
Monday, April 6, 2009
இது ஒரு கவிதைக்கான கவிதை!
படங்கள் இல்லாத
பாடப்புத்தகத்தில்
நீ வந்து அமர்ந்து
கொள்வதால்
புரட்டப் புரட்ட
படப்புத்தகமாகவே
காட்சியளிக்கிறது!
வரியே இன்றி
தலைப்பே கவிதையாய்
எழுதச் சொன்னார்கள்
உன் பெயரை
எழுதிவிட்டேன்!
(முக)வரிகளே இல்லாத
கவிதைதானே நீ...
எனது கவிதையின்
உயிரோட்டம்
பல பக்க வரிகளில் இல்லை
உனது ஒற்றைவரிப்
பின்னூட்டத்தில்தான்
உள்ளது!
"என் உடையில்
எந்த வண்ணம் பிடிக்கும்?"
என்று கேட்கிறாய்
என்ன உடையானாலும்
உன் எண்ண உடை
வண்ணமாம் வெண்மைதான்
எனக்குப் பிடிக்கும்!
உனக்குப் பிடிக்காது
என்பதை
எனக்குப் பிடிக்கும்படி
சொல்வதால்தான்
நமக்குள் பிடித்துப்போனது!
--நாவிஷ் செந்தில்குமார்
