நான் பார்க்கக்கடவா
உன் பருவத்தின்
வளைவு நெளிவுகளில்
எங்கேனும்
ஒளிந்திருக்கக் கூடுமோ
இந்த உலகத்தின்
மிகச்சிறந்த
காதல் கவிதை?
மொட்டவிழும்
முன்காலைப் பொழுதில்
முழங்கால் மடித்துக்
கோலமிடும்
உனைக் கண்டதும்
கட்டவிழ்த்துக் கொண்ட
காதலை
எங்கொளித்துக்கொள்ளும்
என் சிறுபிள்ளை மனசு?
கடல் நீர் இழுத்து
அமுதாய்த் திரித்து
பெய்கின்ற மழையை
கையடக்கக் குடையால்
தடுத்து விடுகின்ற நீ
எதைக்கொண்டு தடுப்பாய்
என்னால் பெய்யும்
காதல் மழையை?
வேலைக்குச்செல்லும் எனக்கு
வினையூக்கியாய்
இதழ் மீது தினமும் நீ
இடும் முத்தத்திலிருந்து
எந்தப் பறவையால்
பிரித்தறியமுடியும்
காதலையும் காமத்தையும்?
--நாவிஷ் செந்தில்குமார்
Saturday, February 21, 2009
வினாக்கள் சில...
Wednesday, February 18, 2009
காதல் நிமித்தம்
பொழுது தோறும்
போக நினைக்கும்
அவள் வீதிப்பயணம்
வாசலுக்கு
நீர் தெளிக்க வருகையில்
உயிர் துப்பிப் போகும்
அவளின் ஓரப்பார்வை
உண்ண உண்ண
பசிக்கத் தூண்டும்
அவள் நினைவு
அவளைத் தேடிக்கண்டதும்
தொலைந்து போகும்
மனசு
அவளைப் பார்க்காத
நாளிலெல்லாம்
சட்டெனப் பிறக்கின்ற
மரணம்...
--நாவிஷ் செந்தில்குமார்
Monday, February 9, 2009
பிப்ரவரி - 14
காலையில்
நிர்வாணம் பூண்ட
நீலவானம்
மின்சாரம் இல்லாததால்
அடிபம்புத் தண்ணீரில்
குளியல்
பரவசம் படிந்த
பறவையின் மொழி
எப்போதும் போல
இன்றும்
எதிர்வீட்டுக் குழந்தையின்
கையசைப்பு...
இவையன்றி
வேறென்ன சிறப்பு
இருக்கமுடியும்
இந்நாளில்?
இனியவளே
நீ காதல்
வயப்படாதவரை...
--நாவிஷ் செந்தில்குமார்
Saturday, February 7, 2009
Subscribe to:
Posts (Atom)